தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கதறியழுது பரபரப்பு ஏற்படுத்திய சதா

டெல்லியில் 6 வயது குழந்தை ஒன்று, தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பிரச்னையை மிகவும் தீவிரமாக கருதிய உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. இதையடுத்து, சுமார் 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வைல்ட் போட்டோகிராபியில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நடிகை சதா, கதறியழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ‘6 வயது குழந்தை இறக்க ரேபிஸ் நோய் காரணம் இல்லை என்று உறுதியான பின்பு இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாய்கள் அனைத்துக்கும் காப்பகங்களை உருவாக்க கால அவகாசம் போதாது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டால், அதிகமான நாய்கள் கொல்லப்படும் சூழ்நிலை ஏற்படும். விலங்கு பிறப்பு கட்டுப்பாடு திட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எந்த அதிகாரியை அணுகுவது, எங்கு சென்று போராடுவது என்று தெரியவில்லை.

இந்த உத்தரவு என்னை மனரீதியாக கொல்கிறது. இது சரியான நடைமுறை கிடையாது. நம் நாட்டை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். நம்மை சுற்றியிருப்பவரை நினைத்தும், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு யோசிக்கவே முடியாதவர்களை நினைத்தும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து இந்த உத்தரவை திரும்ப பெறுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.