ஓராண்டுக்கு பிறகு மகள் துவாவை அறிமுகப்படுத்திய தீபிகா
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்த இந்தியாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், இதுவரை தனது மகள் துவாவின் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்தார். இப்போது முதல்முறையாக தீபாவளியின்போது மகளின் முகத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. பாலிவுட் நட்சத்திர தம்பதி தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த துவாவை தீபிகா படுகோன் அடிக்கடி தன் மடியில் வைத்திருப்பதை போன்ற போட்டோக்கள் பதிவிடப்பட்டு வந்தது. ஆனால், இதுநாள் வரை துவாவின் முகத்தை சமூக வலைத்தளம் எதிலும் அவர் காட்டியது இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் தீபிகா படுகோன், துவா சேர்ந்திருக்கும் வீடியோ வைரலானது.
அப்போது தீபிகா படுகோன், தனது மகளை யாரும் போட்டோ எடுக்க வேண்டாம் என்று ரசிகர்களிடமும், போட்டோகிராபர்களிடமும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இப்போது முதல்முறையாக தீபாவளியையொட்டி தங்கள் மகளின் முகத்தை சமூக வலைத்தளங்களில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி பதிவிட்டுள்ளனர். இன்ஸ்டாவில் 1 கோடி லைக்குகளை இந்த புகைப்படம் குவித்துள்ளது.