தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்: சகோதரர் சபேஷ் பேட்டி
சென்னை: ஜுன் மோசஸ் எழுதி இயக்கியுள்ள படம், ‘பேய் கதை’. வினோத், ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா நடித்துள்ளனர். போபோ சசி இசை அமைத்துள்ளார். வரும் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவாவின் சகோதரரும், இசை அமைப்பாளருமான சபேஷிடம், ‘பல்வேறு மொழிகளில் தேவா 400 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். அவரது மகன் காந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேவாவுக்கு ஏன் இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சபேஷ், ‘உண்மைதான், இதுவரை தேவாவுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பதை நினைத்து எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் நிறைய நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். அகத்தியன் இயக்கத்தில் அஜித் குமார், தேவயானி நடித்த ‘காதல் கோட்டை’ என்ற படத்துக்காக தேவாவுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன? அப்பாவுக்கு பதிலாக மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது வாங்கி இருக்கிறாரே, அது போதும்’ என்றார்.