தேவயானி வீட்டு பையன் சித்தார்த்
திரைக்கு வந்த ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை தொடர்ந்து கணேஷ் எழுதி இயக்கிய ‘3 BHK’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. அதற்கான நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, சித்தார்த், சரத்குமார், தேவயானி, சைத்ரா, மீதா ரகுநாத், இசை அமைப்பாளரும் மற்றும் பிரபல பாடகி பாம்பே ஜெயயின் மகனுமான அம்ரித் ராம்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். கன்னட நடிகை சைத்ரா பேசுகையில், ‘கடந்த சில நாட்களாக தியேட்டர்களுக்கு நேரில் சென்று வந்தோம். பல காட்சிகளில் ‘ஹவுஸ்ஃபுல்’ என்ற போர்டை நாங்கள் பார்த்து அதிக மகிழ்ச்சி அடைந்தோம். இது எனக்கு முதல் தமிழ்ப் படம். உங்களின் அன்பும், ஆதரவும் கண்டிப்பாக எனக்கு தேவை. இன்னும் படம் பார்க்காதவர்கள் உடனே வந்து பாருங்கள்.
தொடர்ந்து நான் தமிழில் நடிக்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார். மீதா ரகுநாத் பேசும்போது, ‘இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பது, ஏதோ ஒரு கனவு மாதிரி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அனைவரும் இப்படத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறோம். எனது முதல் படத்தில் இருந்து இப்போது வரை ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்றார். தேவயானி பேசுகையில், ‘நான் சினிமாவில் நடிக்க வந்து 30 வருடங்களாகிறது. ஆனால், இதுபோல் ஒரு தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். தன் படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து கொண்டாடி வருகிறார்.
இப்படிப்பட்ட தயாரிப்பாளர்தான் சினிமா துறைக்கு வேண்டும். இதுபோன்ற தியேட்டர் விசிட்டை நான் பார்ப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு சரத் குமார் சாருடன் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டானது. மீதா, சைத்ரா இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர்கள் என் மகள்கள் மாதிரி. சித்தார்த் எங்கள் வீட்டு பையன். அவர் எங்கே இருந்தாலும், அந்த இடத்தை ரொம்ப எனர்ஜியாக வைத்திருப்பார்’ என்றார்.