ஹீரோவாக அறிமுகமாகும் தேவிஸ்ரீ பிரசாத்
முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கும் படம், ‘எல்லம்மா’. இதில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், படப்பிடிப்புக்கான கட்டத்துக்கு எந்த பணியும் நகரவில்லை. எனவே, ‘எல்லம்மா’ படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறார். தெலுங்கில் ‘பாலகம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர், வேணு எல்டண்டி.
ரசிகர்களிடம் அப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தில் ராஜூ தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். தற்போது அதில் தேவிஸ்ரீ பிரசாத் நடிப்பதாக தெரிகிறது. பிசியான இசை அமைப்பாளராக இருந்தாலும், சினிமாவில் ஆடி பாடி நடிக்க ஆசைப்படுவதாக பல பேட்டிகளிலும், திரைப்பட விழாக்களிலும் தேவிஸ்ரீ பிரசாத் பேசி வந்தார். தற்போது அவரது ஆசை நிறைவேறியுள்ளது. தமிழிலுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி ேபான்ற இசை அமைப்பாளர்கள் வெற்றிகரமான ஹீரோக்களாக உலா வருகின்றனர். அவர்கள் வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.