நடிக்காத படத்துக்கு சிபாரிசு செய்த தனுஷ்
திரைக்கு வந்த ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது ‘29’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். விது, பிரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜீ ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ், ‘எங்கள் நிறுவனத்தின் முதல் படம், ‘மேயாத மான்’. இதுவரை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பில் 17 படங்களை தயாரித்துள்ளோம்.
எனினும், ‘மேயாத மான்’ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘29’ என்ற படத்தின் கதையை ரத்னகுமார் சொன்னார். முன்னதாக தனுஷுக்கு இக்கதையை சொல்லியிருந்தோம். ஆனால் அவர், ‘இப்போது நான் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன். எனது கரியரின் ஆரம்பத்தில் நான் நடிப்பது போன்ற கதையாக ‘29’ படம் இருக்கிறது. எனவே, இளம் நடிகரை வைத்து படத்தை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்’ என்றார். அதற்கு பிறகு கதைக்கு சரியானவர்களை தேர்வு செய்ய சில வருடங்களானது.
பிறகு விதுவை நடிக்க வைக்கலாம் என்று ரத்னகுமார் சொன்னார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களுக்கு முன்னால் விதுவை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருந்தால், அதற்கு நான் ஓ.கே சொல்லியிருக்க மாட்டேன். அந்த படங்களில் விதுவின் நடிப்பை பார்த்ததால் ஓ.கே சொல்லிவிட்டேன். அதுபோல், ‘அயோத்தி’ படத்தில் பிரீத்தி அஸ்ரானியின் நடிப்பை பார்த்து ஓ.கே சொல்லிவிட்டேன்’ என்றார்.
