தனுஷை பாட வைத்தது எப்படி? அருண் விஜய்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ என்ற படத்தை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘ரெட்ட தல’. பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலசந்திரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளனர். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் நடித்தது குறித்து அருண் விஜய் கூறியதாவது: படத்தின் தலைப்புக்கு ஏற்ப இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். இரண்டும் மிகவும் வித்தியாசமான கேரக்டர் என்பதால், மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளில் என் உயிரை பணயம் வைத்து நடித்தேன். படத்தில் இடம்பெறும் ஒரு மெலடி பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். சாம் சி.எஸ் எழுதி இசை அமைத்துள்ளார். தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வரும் நான், ஒருநாள் அவரிடம் ஒரு பாடலை ஒலிபரப்பினேன். ‘யார் பாடியது? என் வாய்ஸ் போலவே இருக்கிறது’ என்று தனுஷ் ஆச்சரியப்பட்டார். ஏஐ உதவியுடன் சாம் சி.எஸ் பாடிய விஷயத்தை சொன்னேன். அதைக்கேட்டு வியந்த தனுஷ், சாம் சி.எஸ்சின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து பாடி அசத்தினார். நானும், சித்தி இத்னானியும் பங்கேற்ற இப்பாடல் காட்சி மலாக்காவில் படமானது.