தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டீசல் விமர்சனம்...

வடசென்னை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களின் பாதிப்பு காரணமாக, மீனவ சமூகம் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடுகிறது. காவல்துறை வன்முறையை கையாண்டு தோல்வியடைய செய்கிறது. குழாய் நடுவில் துளையிட்டு குருடாயில் திருடும் சாய் குமார், டீசல் மாஃபியாக்களை உருவாக்குகிறார். அதன்மூலம் கிடைக்கும் வருமானம், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த ஹரீஷ் கல்யாணை சாய் குமார் வளர்க்கிறார்.

கெமிக்கல் இன்ஜினியரான ஹரீஷ் கல்யாண், தங்கள் பகுதியில் தனியார் துறைமுகத்தை கொண்டு வர திட்டமிடும் சச்சின் கெடேகரின் ஆட்டத்தை முடிக்க, சாய் குமாரின் டீசல் மாஃபியா தொழிலை தொடர்கிறார். அவருக்கு போட்டியாக போலீஸ் அதிகாரி விநய் ராய் ஆதரவுடன் களத்தில் குதிக்கும் விவேக் பிரசன்னாவுக்கும், ஹரீஷ் கல்யாணுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தின் முடிவு என்ன என்பது மீதி கதை. முதல்முறையாக முழுநீள ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள ஹரீஷ் கல்யாண், மீனவனாகவே வாழ்ந்திருக்கிறார்.

சண்டையிலும், நடனத்திலும் பின்னிப் பெடலெடுத்துள்ளார். சாய் குமார் உணர்ச்சிகரமான நடிப்பில் செம கெத்து காட்டியிருக்கிறார். வில்லத்தனத்தை ஸ்டைலாக வெளிப்படுத்திய விநய் ராய், அவரது அடியாள் போன்ற விவேக் பிரசன்னா கவனத்தை ஈர்க்கின்றனர். வழக்கறிஞராக அதுல்யா ரவி, விநய் ராய் மனைவியாக அனன்யா மற்றும் கருணாஸ், ரமேஷ் திலக், போஸ் வெங்கட், காளி வெங்கட், தங்கதுரை, ஜாகிர் உசேன், சச்சின் கெடேகர், ரிஷி ரித்விக், மாறன், அபூர்வா சிங் என்று, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இயல்பாக நடித்துள்ளது.

நடுக்கடல், மீனவ குப்பம், குருடாயில் குழாய் ஆகியவற்றை ஒளிப்பதிவாளர்கள் எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம்.நாதன் கூட்டணி அசத்தலாக பதிவு செய்துள்ளது. திபு நைனன் தாமஸ் இசையில் பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஸ்டண்ட் சில்வா, ராஜசேகரின் சண்டைக்காட்சிகள் அதிர வைக்கின்றன. ரெம்போன் பால்ராஜின் ஆர்ட் டைரக்‌ஷன் பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விஷயத்தில் இவ்வளவு அரசியல் இருக்கிறதா என்று திடுக்கிட வைக்கும் கதையை எழுதி இயக்கியுள்ள சண்முகம் முத்துசாமியின் சமூக அக்கறைக்கு பாராட்டுகள். ஆனால், அரசியல் பலத்துடன் பெரும்புள்ளிகள் பழிவாங்குவது என்ற வழக்கத்தை மாற்றி யோசித்திருக்கலாம்.