வித்தியாசமான வேடங்கள்: மோனிஷா பிளெஸ்சி ஆசை
சென்னை: ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் மோனிஷா பிளெஸ்சி. இதற்கு முன் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்தார். அவர் கூறியது: நான் சென்னை பொண்ணுதான். அப்பா மலையாளி, அம்மா தமிழ். எனக்கொரு தங்கை இருக்கிறார். படிக்கும் காலத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. அதனால் எலெக்ட்ரானிக் மீடியா படித்தேன். டிவியில் முதலில் வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்க்கையை மாற்றியது சன் டிவிதான். சன் மியூசிக், ஆதித்யா சேனல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றேன். அதன் மூலம் தொடர்ந்து யூடியூப்களிலும் வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அப்போதுதான் ‘மாவீரன்’ ஆடிஷனுக்கு அழைத்தார்கள். சிவகார்த்திகேயன் அண்ணா, எனக்கு நிறைய அட்வைஸ் செய்தார்.
பிறகு ‘கூலி’ படத்தில் நடித்தது இப்போதும் கனவு போல் இருக்கிறது. படத்தில் ஹாஸ்டல் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எனது நடிப்பை கைதட்டி ரஜினிகாந்த் சார் பாராட்டியது மறக்க முடியாது. இப்போது விஜய் சாருடன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறேன். இது தவிர விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படமும் இருக்கிறது. சினிமா காரியர் ஆரம்பத்திலேயே ரஜினி சார், விஜய் சார், சிவாண்ணா என மூவருடன் நடித்துவிட்டது பெருமையாக இருக்கிறது. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் கிடையாது. காரணம், காதல் காட்சிகளில் பாடல்களில் நான் பொருந்துவேனா எனக்கு தெரியாது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறேன். பஹத் பாசில், சாய் பல்லவி ஆகியோருடன் நடிக்க விரும்புகிறேன். வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு மோனிஷா பிளெஸ்சி கூறினார்.