ட்யூட் ஜென் ஸீ படமா? இயக்குனர் விளக்கம்
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம், ‘ட்யூட்’. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்துள்ளனர். வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் கீர்த்தீஸ்வரன் கூறியதாவது: பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்திவருவார்கள். காதல் கதையில் மாஸ் இருக்கும். மமிதா பைஜூவை நான் தேர்வு செய்தபோது ‘பிரேமலு’ ரிலீசாகவில்லை.
‘சூப்பர் சரண்யா’ என்ற படத்தை பார்த்துவிட்டு அவரை நான் தேர்வு செய்தேன். அவர் இக்கதைக்குள் வந்தபோது, ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி படம் வந்திருப்பதாக எனக்கு தோன்றியது. இசையில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாய் அபயங்கர், இதில் வேறொரு பாணியில் அசத்தியிருக்கிறார்.
இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், இசை அமைப்பாளர் ஆகியோர் இளம் தலைமுறை என்பதால், இது ஜென் ஸீ படமா என்று கேட்கின்றனர். இக்காலத்து இளைஞர்களும், குடும்ப பார்வையாளர்களும் கொண்டாடும் வகையில் ஒரு மாபெரும் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். முக்கிய வேடங்களில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் நடித்துள்ளனர்.