துல்கருடன் நடிக்க பயமாக இருந்தது: பாக்யஸ்ரீ போர்ஸ்
சென்னை: ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் தயாரித்துள்ள படம், ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளனர். வரும் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாக்யஸ்ரீ போர்ஸ் பேசும்போது, ‘இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது. ஒரு புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவளித்த படக்குழுவுக்கு நன்றி. துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றவுடன், அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்று பயந்தேன். ஆனால், படப்பிடிப்பில் அவர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னை கண்டுபிடித்து வாய்ப்பளித்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ மூலம் தமிழுக்கு வருவது எனக்கு கிடைத்த பெருமை’ என்றார். ராணா பேசுகையில், ‘என் சிறுவயதில் சினிமாவை பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டுள்ளேன். அதை இப்படத்தின் மூலம் இயக்குனர் என்னை பார்க்க வைத்திருக்கிறார். துல்கர் சல்மான் நடிப்பு சக்ரவர்த்தியாக மாறி அசத்தியுள்ளார்’ என்றார்.
