கல்யாணியை புகழ்ந்த துல்கர் சல்மான்
டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான ‘லோகா சாஃப்டர் 1: சந்திரா’ என்ற பான் இந்தியா படம் அமோக வரவேற்பு பெற்று, 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. சூப்பர் வுமன் கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். தனது கேரக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து அவர் கூறுகையில், ‘இப்படத்தில் ஒப்பந்தமான நேரத்தில், எனக்கு வழக்கத்தை விட அதிகமான பதற்றம் ஏற்பட்டது. என்னை இதுபோன்ற கேரக்டரில் ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள் என்ற பயம் அதிகரித்தது. ஆனால், என்னை பற்றிய தகவல்கள் வெளியானபோதே ரசிகர்களின் அதீத வரவேற்பும், அன்பும் எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும், மற்ற மாநிலங்களிலும் இப்படத்துக்கான வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற அதிக சவால்கள் நிறைந்த கேரக்டரில் நடிப்பதற்கான உத்வேகம் கிடைத்துள்ளது’ என்றார்.
இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் துல்கர் சல்மான் கூறும்போது, ‘ஒரு ஹீரோவாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனது எந்த படத்துக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பை நான் பெற்றதில்லை. இப்படம் நாடு முழுவதும் மட்டுமின்றி, இந்த உலகம் முழுவதும் வெற்றிபெற்றுள்ளது. சந்திரா கேரக்டருக்கு கல்யாணி பிரியதர்ஷனை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நடித்தார். அவரது மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுதான், இப்படம் இவ்வளவு பெரிய வெற்றிபெற முக்கிய காரணம். இன்றைய மீம்ஸ்களில் கூட அவரை பாராட்டுவது அதிக மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.