யானையை மையப்படுத்திய அழகர் யானை
சென்னை: ‘நல்ல நேரம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ராம் லட்சுமண்’ ஆகிய படங்களின் பாணியில், குழந்தைகளை கவரும் வகையில் தயாராகும் படம் ‘அழகர் யானை’. எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிக்கிறார். ‘மரகதக்காடு’ மங்களேஷ்வரன் எழுதி இயக்குகிறார். புகழ் ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் ஆகியோருடன் 80 அடி உயர யானை நடிக்கிறது.
சபா குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படம் குறித்து மங்களேஷ்வரன் கூறுகையில், ‘அனைவருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் விதைப்பதே இப்படத்தின் கதை. கங்கைகொண்ட சோழபுரத்தில் 169 அடி உயரம் கொண்ட யானை சிலை இருக்கிறது.
ராஜேந்திர சோழன் வெற்றிபெற்ற பிறகு அதை நிறுவி, ‘அழகர் யானை’ என்று பெயரிட்டார். ஒரு சோழ மன்னன், பாண்டிய நாட்டில் பயன்படுத்தப்படும் அழகர் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார். அதுபோல் ஒரு நம்பிக்கையை விதைக்கும் வகையில், ‘அழகர் யானை’ என்ற பெயரை சூட்டியுள்ளோம். யானையை மையப்படுத்தி, குழந்தைகள் ரசிக்கும் விதமாக கிருஷ்ணகிரி, கேரளா ஆகிய பகுதிகளிலுள்ள மலையடிவாரங்களில் படம் உருவாகிறது’ என்றார்.