தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இரவின் விழிகள் விமர்சனம்...

ஏற்காடு பதியிலுள்ள அடர்ந்த காட்டில், திடீர் திடீரென்று கொலைகள் நடக்கிறது. அவர்களை கொன்ற சைக்கோ ஆசாமி யார் என்று போலீசார் வலைவீசி தேடுகின்றனர். அப்போது சைக்கோவிடம் ஹீரோ மகேந்திரா, ஹீரோயின் நீமா ரே சிக்கி உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை காப்பாற்ற போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் முற்படும்போது, சைக்கோ ஆசாமி தன்னை யார் என்று அடையாளப்படுத்துகிறான்.

இதன் விளைவுகள் மீதி கதை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் படத்தை எழுதி இயக்கியுள்ள சிக்கல் ராஜேஷ், இன்றைய இளைய தலைமுறையினரை சோஷியல் மீடியா எவ்வளவு தூரம் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை அக்கறையுடன் சொல்லியிருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் சாதனை படைத்துவிட்டதாக நினைக்கும் மகேந்திராவும், நீமா ரேவும் இயல்பாக நடித்துள்ளனர்.

‘பிங்காரா’ என்ற கன்னட படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே, ஆங்காங்கே கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி ராமச்சந்திரன், ஆன்சி சிந்து, சிக்கல் ராஜேஷ் ஆகியோர் நன்கு நடித்துள்ளனர். ஏற்காடு வெள்ளிமலையின் இயற்கை அழகை பாஸ்கர் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ.எம்.அசார் அமைத்த பின்னணி இசை, இன்னும் திகிலூட்டி இருக்க வேண்டும். சைக்கோ ஆசாமியின் சமூகம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மீதான கோபம் நியாயமானதாக இருந்தாலும், அதன் தாக்கம் பல நல்ல விஷயங்களுக்கும் பயன்படுவதை சொல்லாமல் விட்டது ஏன்? மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆயினும் த்ரில்லரில் இது தனி ரகமே.