இரவின் விழிகள் இசை வெளியீடு
சென்னை: மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். நீமா ரே ஹீரோயின். நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை - ஏ.எம் அசார். ஒளிப்பதிவு - பாஸ்கர்.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் சிக்கல் ராஜேஷ் பேசும்போது, “படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார்’’ என்றார்.