தனது பெயரில் போலி கணக்கு சம்யுக்த வர்மா புகார்
கொச்சி: மலையாள நடிகையும், நடிகர் பிஜு மேனனின் காதல் மனைவியுமான சம்யுக்தா வர்மா, சோஷியல் மீடியாவில் தனது பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 23 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‘தென்காசிப்பட்டணம்’ என்ற படத்தில் நடித்த அவர், இதுவரை 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பிஜு மேனனை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகியுள்ள அவர், தற்போது பேஸ்புக்கில் தனது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின்தொடரும் போலி கணக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமிலும் தனது பெயரில் போலி கணக்குகள் அதிகரித்து வருகின்றன என்றும் எச்சரித்துள்ளார். தனக்கு இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெற்ற அதிகாரப்பூர்வ ஒரு கணக்கு மட்டுமே இருப்பதாகவும், மற்ற அனைத்து கணக்குகளும் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை படித்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போலியான கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் சம்யுக்த வர்மா கூறியுள்ளார்.
