150 படங்களில் நடித்த பிரபல நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்
கடந்த 1949 டிசம்பர் 20ம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜேஷ் பிறந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியு.சி முடித்த பிறகு சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னையில் சில பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார். 1974ல் ராஜேஷுக்கு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1979ல் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘கன்னிப் பருவத்திலே’ வெளியானது. கே.பாலசந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’, ேக.பாக்யராஜ் இயக்கிய ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்கள் ராஜேஷின் நடிப்பை உலகறிய செய்தது. கமல்ஹாசனுடன் ‘சத்யா’, ‘மகாநதி’, ‘விருமாண்டி’ போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
ஆசிரியர், நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், டி.வி நடிகர், ரியல் எஸ்டேட் அதிபர் என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ராஜேஷ், அனைத்து துறைகளிலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்தார். அவரை கடந்த 2022ல் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக தமிழக அரசு நியமித்தது.
தொடர்ந்து 50 வருடங்கள் வெற்றிகரமான நடிகனாக வலம் வந்த ராஜேஷ், ஆங்கில திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் எழுதினார். 1983ல் ஜோன் சிலிவியா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் இருக்கின்றனர். ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.