தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரசிகையை அவமதித்த ஷேன் நிகாம்

மலையாள முன்னணி நடிகர் ஷேன் நிகாம், அடிக்கடி தயாரிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ படத்தில் நடித்திருந்த அவர், மலையாளம் மற்றும் தமிழில் வெளியான ‘பல்டி’ படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக கேரளாவில் நடந்த புரமோஷனில் பங்கேற்ற அவர், தனது ரசிகை ஒருவர் மேடையின் கீழே இருந்து பலமுறை அழைத்தும் அவரை பார்க்காமல், வேறு பக்கம் பார்ப்பது போன்ற ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து ஷேன் நிகாமை பல ரசிகர்கள் கண்டித்து விமர்சித்தனர். இதுகுறித்து பேசிய ஷேன் நிகாம், ‘இந்த வீடியோவை எடிட் செய்தவரின் திறமையை பாராட்டுகிறேன். காரணம்.

அந்த பெண் அதற்கு முன்பு அழைத்தபோது, நான் அவரை திரும்பி பார்த்து அங்கீகரித்தேன். அந்த காட்சிகள் மட்டும் வீடியோவில் கவனமாக நீக்கப்பட்டுள்ளன. பொதுவாக, ரசிகர்களின் உற்சாகம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிறகு ஏன் அவர்களை நான் புறக்கணித்து அவமதிக்க போகிறேன்?’ என்றார். ஷேன் நிகாமின் புறக்கணிப்புக்கு ஆளானதாக சொல்லப்படும் பெண், தனது சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தான் அப்படி ஷேன் நிகாமை அழைத்தது, தனக்கு பக்கத்தில் இருந்த பெண் அவருடன் கைகொடுக்க விரும்பியதால் என்றும், அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஷேன் நிகாமிடம் தான் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும், இந்த வீடியோ ஷேன் நிகாமை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.