என்னை ரசிகர்கள் வெறுத்தனர்: அனுபமா கண்ணீர்
ஐதராபாத்: அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ என்ற தெலுங்கு படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவர் நடித்த ‘டிராகன்’ என்ற தமிழ்ப் படம் வெளியாகி ஹிட்டானது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘பைசன்’ என்ற தமிழ்ப் படம், வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் அவர், ‘டில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததால் ரசிகர்கள் தன்னை வெறுத்ததாக ஒரு பேட்டியில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறுகையில், ‘நான் நடித்திருந்த ‘டில்லு ஸ்கொயர்’ என்ற படத்தில், எனக்கு வலுவான கேரக்டர் கிடைத்தது. அது, கமர்ஷியல் படங்களில் வருவது போன்ற கேரக்டர் கிடையாது. அதுபோன்ற கேரக்டர்களை தவறு என்று நான் சொல்லவில்லை. அப்படத்தில் இடம்பெற்ற எனது கதாபாத்திரம், எனது ரியல் கேரக்டருக்கு நேரெதிரானது. எனக்கு சற்றும் பொருந்தாத ஆடைகளை அணிந்து நடித்தேன். அந்த கேரக்டருக்கு அதுபோன்ற ஆடைகள் தேவைப்பட்டது.
அவற்றை அணிந்து நடித்தது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. அதுபோல் நடிக்கும் முடிவை எடுப்பது சற்று கடினமாக இருந்தது. முதலில் அவ்வாறு நடிக்க நான் தயங்கினேன். அப்படத்தில் நடித்ததற்காக பல ரசிகர்கள் என்னை வெறுத்தனர். சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை அப்படத்தின் மூலம் நான் புரிந்துகொண்டேன்’ என்றார். அவ்வாறு பேசும்போது, அனுபமா கண்ணீர் விட்டார். இந்த பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.