அப்பாவை நடிக்க வைத்து அம்மாவின் நகையை அடகு வைத்து படம் எடுத்தேன்; புது இயக்குனர் உருக்கம்
சென்னை: அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, வர்ஷினி வெங்கட், ஷாலினி, ரோபோ சங்கர், ஆனந்த் பாண்டி, கேபிஒய் ராஜா, ரியா, பிரியங்கா நாயர் நடித்துள்ள படம், ‘சொட்ட சொட்ட நனையுது’. கேபிஒய் ராஜா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ரயீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அடடா ஜிமிக்கி கம்மல்’ ரஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார். வரும் 22ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து நிஷாந்த் ரூசோ கூறுகையில், ‘தலையில் விழும் சொட்டையை வைத்து எழுதிய கதையை, திரையில் எப்படி சொல்லி ரசிகர்களுக்கு புரியவைப்பார் என்று இயக்குனர் மீது சந்தேகப்பட்டேன். உடனே, நிஜவாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களை போய் பார்க்க சொன்னார். எனது உறவினர்களில் அதுபோல் இருந்த சிலரை நான் சந்தித்தபோது, அதன் வலி என்னவென்று புரிந்தது.
உடனே இக்கதையின் வலிமையும் புரிந்தது. சொட்டை என்பது இயற்கை. அதை ஒரு பெரிய குறையாக சொல்வதால், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கிறது. இப்படத்தை பார்த்த பின்பு, சொட்டை தலையை பற்றி யாரும் கமென்ட் செய்ய மாட்டார்கள். இப்படத்தின் கதை ரசிகர்களின் மனதை மாற்றும். அதனால்தான் அதே கெட்டப்பில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன்’ என்றார். புது இயக்குனர் நவீத் எஸ்.ஃபரீத் உருக்கமாக பேசினார். அவர் கூறும்போது, ‘என் தந்தையை நடிக்க வைத்து, அவரிடம் பணம் வாங்கி ஷூட்டிங்கை முடித்தோம். என் அம்மாவின் நகையையும் அடகு வைத்தேன். இளம் வயதிலேயே தலையில் சொட்டை விழுந்த ஹீரோவுக்கு திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். அது நடந்ததா, இல்லையா என்பது கதை’ என்றார்.