மும்பையில் எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்கல; சென்னையில் தனிக்குடித்தனம் வரும் சூர்யா - ஜோதிகா தம்பதி: பரபரப்பு தகவல்கள்
மும்பைக்கு திடீரென குடிபெயர்ந்த சூர்யா, ஜோதிகா தம்பதி, அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு வர உள்ளனர். ஆனால் அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் சிவகுமாரின் வீடு இருந்தது. இந்த வீட்டை சிவகுமார் தனது சம்பாத்தியம் மூலமாக சிறுக சிறுக சேமித்து கட்டியிருந்தார். சூர்யா சினிமாவில் நடிகராகி, பிரபலம் ஆனதும் ஜோதிகாவை காதலித்து மணந்தார். பிறகு அவரது தம்பி கார்த்தியும் நடிகரானார். அவருக்கும் திருமணம் நடந்தது.
இதையடுத்து குடும்பம் பெரிதாகிவிட்டதால், அடையாறு பகுதியில் பிரமாண்ட பங்களா கட்டினார் சூர்யா. அங்கு அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில் திடீரென சூர்யா, ஜோதிகா தம்பதி தங்களது குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆனார்கள். இதற்கு என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள். அப்போது வெவ்வேறு சமயத்தில் சூர்யா தரப்பிலிருந்து 2 காரணங்கள் கூறப்பட்டது. ஒரு முறை, குழந்தைகளின் படிப்பிற்காக மும்பை சென்றிருப்பதாக சூர்யா சொன்னார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், ஜோதிகா சென்னைக்கு குடிபெயர்ந்து 27 வருடங்கள் கடந்துவிட்டது. பெண் என்பவள், கணவன் வீட்டுக்கு மட்டுமல்ல, அவளது தாய் வீட்டுக்கும் சொந்தமானவள். அதனால் இனி தனது பெற்றோருடன் இருப்பதற்காக அவருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என சூர்யா கூறினார். இந்த விளக்கத்தை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்துக்கு பிறகு புகுந்த வீட்டுக்குதான் எல்லோரும் செல்வார்கள். இது புதிதாக இருக்கிறதே என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரித்ததில் இந்தியில் படங்களை தயாரிக்கவும் நடிக்கவும்தான் சூர்யா, ஜோதிகா அங்கு சென்றது தெரியவந்தது.
ஆனால் அவர்கள் சேர்ந்து தயாரித்த சர்ஃபிரா இந்தி படம் படுதோல்வி அடைந்தது. நடிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வரவில்லை. இதையடுத்து திரும்பவும் சென்னைக்கு வந்து செட்டில் ஆக அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக நீலாங்கரையில் ரூ.30 கோடியில் சூர்யா வீடு கட்டி வருவதாகவும் அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. வட நாட்டைச் சேர்ந்த ஜோதிகாவுக்கு, சூர்யா குடும்பத்தாருடன் உறவு சுமூகமாக இல்லை என சொல்லப்படுகிறது. இதனாலேயே அவர்கள் தனிக்குடித்தனம் போக இருப்பதாக பேசப்படுகிறது.