ஃப்ரீடம் விமர்சனம்...
கடந்த 1991ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமாக நடக்கும்போது, அங்குள்ள தமிழர்கள் பலர் தப்பித்து ராமேஸ்வரத்துக்கு வருகின்றனர். அதில், சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் தம்பதியும் இருக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் இந்திய முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். இதனால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அகதிகளை விசாரிக்கும் போலீசார், அவர்களை வேலூர் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர்.
அப்பாவிகளான அகதிகள், சிறையில் 200 நாட்களுக்கு மேல் ரகசிய சுரங்கம் தோண்டி, சசிகுமார் தலைமையில் தப்பிக்கின்றனர். ஆனால், போலீசாரிடம் வசமாக சிக்குகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. 1995ல் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி, சினிமாவுக்காக கற்பனையை கலந்து எழுதி இயக்கியுள்ளார் சத்யசிவா. சீரியஸான வேடத்தில் சசிகுமார் 100 சதவீதம் இயல்பாக நடித்துள்ளார்.
லிஜோமோல் ஜோஸ் தோற்றத்திலும், நடிப்பிலும் பரிதாபத்தை வரவழைக்கிறார். கொடூர போலீஸ் அதிகாரி சுதேவ் நாயர், பேராசிரியர் மு.ராமசாமி, மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ்கண்ணா, ‘பாய்ஸ்’ மணிகண்டன், விஜய் சத்யா, கம்பட்டி மணிகண்டன் ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
கலை இயக்குனர் சி.உதயகுமாரின் பணி அதிசிறப்பு. என்.எஸ்.உதயகுமாரின் கேமரா, காட்சிகளை மீறாமல் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளது. ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசையும், பாடல்களும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. உண்மை சம்பவத்தை லாஜிக் பற்றி கவலைப்படாமல் இயக்கியுள்ளார், சத்யசிவா. மனிதநேயமே முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.