காந்தி கண்ணாடி: விமர்சனம்
வெட்டிங் பிளானர் கேபிஒய் பாலாவிடம், தனது 60வது திருமண விழாவை விமரிசையாக நடத்தி தர கேட்கிறார் செக்யூரிட்டி பாலாஜி சக்திவேல். பல லட்ச ரூபாய் பட்ஜெட் போடும் கேபிஒய் பாலா, அதை கட்ட முடியுமா என்று கிண்டலடிக்கிறார். பாலாஜி சக்திவேல், 80 லட்ச ரூபாய் பணம் திரட்டுகிறார். அப்போது பண மதிப்பிழப்பு சட்டம் அமலாகிறது. இதனால் பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பாலாஜி சக்திவேல், மனைவி அர்ச்சனாவின் கனவை நிறைவேற்றினாரா? அதற்கு கேபிஒய் பாலா உதவினாரா என்பது மீதி கதை.
எத்தனை வயதானாலும் காதல் மாறாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஷெரீஃப். இவரா காமெடி நடிகர் என்று ஆச்சரியப்பட வைக்கிறார், கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள கேபிஒய் பாலா. அவரது யதார்த்தமான நடிப்புக்கு பாஸ் மார்க் போடலாம். காதலியாக வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, நச். கதையின் தூண்கள் என்றால், காந்தியாகவே வாழும் பாலாஜி சக்திவேலும், கண்ணம்மாவாகவே மாறிய அர்ச்சனாவும்தான்.
நிகிலா சங்கர், அமுதவாணன், சரத் ரவி, ஜீவா சுப்பிரமணியன், ஆராத்யா, ரிதுசாரா, மனோஜ் பிரபு, மதன், முருகானந்தம் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. விவேக், மெர்வின் இசையில் பாடல்கள், பின்னணி இசை அழுத்தம். 60 வயது காதலை நேர்த்தியாக சொன்ன இயக்குனர் ஷெரீஃப், முற்பகுதியில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஜமீன் பாலாஜி சக்திவேலுக்கு பணத்தின் மதிப்பு தெரியாதது போன்ற காட்சிகள் நெருடுகிறது.