தெய்வத் திருமகள் சிறுமி ஹீரோயின் ஆனார்: முதல் படத்திலேயே ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய சாரா அர்ஜுன்
சென்னை: தமிழில் வெளிவந்த விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இதன்பின் ‘சைவம்’, ‘சில்லு கருப்பட்டி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பொன்னியின் செல்வன் படத்தில் சாரா அர்ஜுனை பார்த்த பலரும், ‘தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தையா இது’ என ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளிவந்த ‘துரந்தர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக சாரா அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது என பலரும் விமர்சனங்களை முன் வைத்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது சாராவுக்கு 20 வயதாகிறது. இந்நிலையில், துரந்தர் படத்தில் நடிப்பதற்காக சாரா அர்ஜுன் ரூ. 1 கோடியே 10 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
