நல்ல கதைகளே வெற்றிபெறும்: ஜி.வி.பிரகாஷ் குமார்
சென்னை: அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை தொடர்ந்து மு.மாறன் எழுதி இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, சந்திரிகா ரவி, லிங்கா, முத்துக்குமார், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு இமான் இசை அமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ‘மிகவும் இன்ட்ரஸ்டிங்கான ‘பிளாக்மெயில்’ கதையை மாறன் சொல்லும் போதே பிடித்துவிட்டது. அவர் திறமையான ஒரு இயக்குனர். அவரது குரு கே.வி.ஆனந்த் சார் மாதிரி சினிமாவில் ஒரு நல்ல இடத்துக்கு வருவார்.
இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றிபெறும். அது எந்த படமாக இருந்தாலும் சரி, நல்ல கதைகள் மட்டுமே வெற்றிபெறும். இன்ஸ்டாகிராமில் தேஜு அஸ்வினியுடன் இணைந்து ஆடினேன். வைரலானது. அதனால்தான் இப்படத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்’ என்றார். தேஜு அஸ்வினி கூறுகையில், ‘ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஒரு நிமிட வீடியோவில் நடித்தேன். அப்போது அவர் கொடுத்த வாக்கின்படி இந்த வாய்ப்பு கிடைத்தது. இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் அவருக்கு நன்றி’ என்றார்.