கிசுகிசுக்களால் கோபமடைந்த மீனாட்சி சவுத்ரி
ராஷ்மிகா மந்தனா, கயாடு லோஹர் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து, புதிய ‘நேஷனல் கிரஷ்’ நடிகையாக மாறுவார் என்று மீனாட்சி சவுத்ரி மீது நம்பிக்கை வைத்த ரசிகர்கள், தற்போது அந்த எண்ணத்தில் மண் விழுந்ததை நினைத்து புலம்புகின்றனர். தமிழிலும், தெலுங்கிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள அவர், அதில் சில படங்களின் வெற்றியால் முன்னணிக்கு வந்து, கோடிக்கணக்கில் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். ஆனால், தற்போது அவருக்கு போட்டியாக ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ போர்ஸ் போன்ற ஹீரோயின்கள் டோலிவுட்டை ஆக்கிரமித்து வருவதால், முன்பு போல் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைப்பதில் ஒரு மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘சங்கராந்திகி வஸ்துனம்’ போன்ற படங்களில் அவரது நடிப்பும், கிளாமரும் பேசப்பட்டது.
ஆனால், தற்போது அவருக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிய அவர், தன்ைன பற்றி வெளியான கிசுகிசுக்களால் தனது திரைப்பயணம் தடைப்பட்டுள்ளதோ என்று சந்தேகப்படுகிறார். அதாவது, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் குடும்ப உறவினரும், நடிகருமான சுஷாந்த் என்பவரை மீனாட்சி சவுத்ரி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், தங்களுக்குள் காதல் இல்லை என்று மீனாட்சி சவுத்ரி மறுத்துள்ளார். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘யார் என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்புகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ என்னை பற்றி கிசுகிசுக்கள் பரப்பி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை’ என்று கோபப்பட்டார்.
