கோவிந்தாவிடம் விவாகரத்து கேட்கும் மனைவி
பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பியுமான கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு எதிரிலுள்ள வீட்டில் கோவிந்தா தங்கியிருக்கிறார். இந்நிலையில், மும்பையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சுனிதா மனு தாக்கல் செய்திருக்கிறார். சமரச பேச்சுவார்த்தை ேதால்வி அடைந்தது. மனு மீதான விசாரணைக்கு சுனிதா சரியான நேரத்துக்கு கோர்ட்டில் ஆஜராகிறார். கோவிந்தா கோர்ட்டுக்கு வருவதையே தவிர்த்துவிடுகிறார். அவருக்கும், 30 வயது மராத்தி நடிகைக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே இந்த பிரிவுக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சுனிதா அளித்த விளக்கத்தில், ‘மும்பை மகாலட்சுமி கோயிலுக்கு அடிக்கடி சென்று, கோவிந்தாவுடன் அமைதியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். கோவிந்தா எனக்கு இரு குழந்தைகளை வழங்கினார். எனது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு இருந்தாலும், தெய்வ அருளால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். ஆணுக்கும், பெண்ணுக்கும் வலியை ஏற்படுத்துவது சரியில்லை. சூழ்நிலை எதுவாக இருந்தாலும், என் குடும்பத்தை உடைக்க முயற்சிக்கும் நபரை கடவுள் மன்னிக்க மாட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பாலிவுட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.