தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹரிஹர வீர மல்லு - திரைவிமர்சனம்

  மெகா சூர்யா புரொடக்ஷன் ,  மற்றும் எம்.ரத்னம் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் க்ரிஷ் ஜகர்ல முடி இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ், நாசர் , உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் " ஹரிஹர வீர மல்லு ". 17 ஆம் நூற்றாண்டு வைரத்துக்காக அடிமையாக்கப்படும் இந்தியர்கள்....

 

மெகா சூர்யா புரொடக்ஷன் ,  மற்றும் எம்.ரத்னம் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் க்ரிஷ் ஜகர்ல முடி இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ், நாசர் , உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் " ஹரிஹர வீர மல்லு ". 17 ஆம் நூற்றாண்டு வைரத்துக்காக அடிமையாக்கப்படும் இந்தியர்கள். இன்னொரு புறம் முகலாயர் ஆட்சியில் அடக்கு முறையை எதிர்கொள்ளும் இந்துக்கள். வைரமும் வைராக்கியமும் இணைந்து ஒரே களத்தில் பயணிக்கும் திரைக்கதையில் அடிமையாக வாழும் மக்களை காப்பாற்ற வரும் தலைவனாக வருகிறார் வீரமல்லு ( பவன் கல்யாண்). ஆரம்பத்தில் திருடனாக இருந்து இருப்பவர்களிடமிருந்து திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரமல்லு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கப்பட்ட இந்துக்களுக்காக போராடத் துவங்குகிறார். இதற்கிடையில் குன்னூரில் இருந்து கடத்தப்பட்ட கோஹினூர் வைரத்தை ஹௌரங்கசீப் மன்னரிடம் இருந்து கொண்டு வந்தால் அதற்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என வீர மல்லுவுக்கு வாய்ப்பு கிடைக்க குழுவாக கிளம்புகிறார் வீரமல்லு.

மாஸ், கிளாஸ், ஸ்டைல் , ஆக்சன், அதிரடி என கலக்குகிறார் பவன் கல்யாண். அவர் உடையும் நடையும் பார்வையும் கூட நிச்சயம் தெலுங்கு ரசிகர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்து. நிதி அகர்வால் அழகாக இருந்தாலும் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு விதமான தோற்றத்திலும் இருக்கிறார். குறிப்பாக அவரது முகத்தில் ஏராளமான எடிட்டிங் வேலைகள் அவரது இயற்கையான அழகை மறைக்கின்றன. சத்யராஜ், நாசர், உள்ளிட்ட வழக்கமான பிரம்மாண்ட கதைக்குள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள். ஞான சேகர் மற்றும் மனோஜ் பரமம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு. கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். ஆனால் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் வகையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். செயற்கை தனத்தின் உச்சத்தில் பல காட்சிகள் சலிப்பை உண்டாக்குகின்றன. அதிலும் சண்டைக் காட்சிகள் , தேவையில்லாமல் பவன் கல்யாண் ஆகாசத்தில் பறக்கிறார். அதையெல்லாம் தவிர்த்து இருக்கலாம்.

பீரியட் கால கதை, ஹௌரங்கசீப் காலம் கோஹினூர் வைரம் , சனாதனம் என இவ்வளவு உண்மை சம்பவங்களை உட்பகுத்தி கதை சொல்லும்பொழுது அதில் இன்னும் சில உண்மையான போராட்ட வீரர்களின் கதையையே உருவாக்கி இருக்கலாம். கதையின் அடிப்படை இந்து - முஸ்லிம் பிரச்சனை தான் என்றால் திரைக்கதையை இன்னும் அதைச் சார்ந்து வலிமையாக எழுதி இருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இப்படி மதப் பிரச்சினைகளை தூண்டுவது போல் படங்கள் வருவது தேவையா என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் பிரம்மாண்டம், பவனிசம், மாஸ், என பவன் கல்யாண் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து. ஆனால் இன்னமும் திரைக்கதையை வலிமையாக்கி இருந்தால் " பாகுபலி" போல் நிச்சயம் வரலாறு படைத்திருக்கும் " ஹரிஹர வீர மல்லு பாகம் 1".