ஹரீஷ், அதுல்யா லவ் கெமிஸ்ட்ரி
சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள ‘டீசல்’ என்ற படம், தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், சாய் குமார், அனன்யா, விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைக்க, தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் வழங்க, எஸ்.பி சினிமாஸ் தயாரித்துள்ளது.
படம் குறித்து சண்முகம் முத்துசாமி கூறுகையில், ‘அன்றாடம் நமது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு சென்றுவிடுகிறோம். அதற்கு பின்னால் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்றன. அது ஒரு பெரிய ஊழல் உலகமாக இருந்தது. அது மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த கதைக்கு ஏழு வருடங்கள் ஆய்வு செய்தேன். குருடாயில் திருட்டு பற்றி துணிச்சலாக சொல்லியிருக்கிறோம்.
2014க்குள் நடந்து முடியும் கதையில், முதல்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். மீனவனாக நடிப்பதால் போட், விசைப்படகு ஓட்ட பயிற்சி பெற்றார். மீன் பிடிக்க கற்றுக்கொண்டார். அவருக்கும், வழக்கறிஞராக வரும் அதுல்யா ரவிக்குமான லவ் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருக்கும். ராயபுரம், காசிமேடு, பழவேற்காடு கடற்கரை பகுதி தொடங்கி, நாகப்பட்டினம் கடற்கரை வரை காட்சிகளை படமாக்கினோம். நடுக்கடலில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி சாதனை படைத்தோம்’ என்றார்.