சிம்பு படம் கைவிடப்பட்டதா?
சிம்பு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பங்கேற்ற காட்சிகளை வெற்றிமாறன் இயக்கியதை தொடர்ந்து, இது புதிய படத்தின் புரொமோ ஷூட் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்குவதாக வெற்றிமாறன் சொன்னார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வட சென்னை’ படத்திலுள்ள சில கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும், ‘ராஜன் வகையறா’ என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இப்படம் கைவிடப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால், அது வதந்தி என்றும், விரைவில் புதுப்பட அப்டேட் வெளியாகும் என்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெற்றிமாறன் கூறுகையில், ‘எனது அடுத்த படத்தின் அப்டேட் சில நாட்களில் வெளியாகும். இப்படம் முடிந்த பிறகு தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை 2’ உருவாகும்’ என்றார். இத்தகவலை, அவர் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ என்ற படத்தின் பிரத்தியேக காட்சியில் தெரிவித்தார். அவரது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ள இப்படம், வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. வெற்றிமாறனுடன் இணைந்து இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வழங்குகிறார்.