பஞ்சாபில் கடும் மழை வெள்ளம்: 5 கிராமங்களை தத்தெடுத்தார் சல்மான் கான்
புதுடெல்லி: சமீப நாட்களாக வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சல்மான் கானின் ‘பீயிங் ஹியூமன்’ தொண்டு நிறுவனம் சார்பில், ஐந்து படகுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று படகுகள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், உணவு வழங்குவதற்கும் களத்தில் உள்ள வீரர்களுக்கு உதவியாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படகுகள் பஞ்சாப் மாநில எல்லையோர கிராமமான பிரோஸ்பூருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாபில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 5 கிராமங்களை சல்மான் தத்தெடுத்துள்ளார். இதையடுத்து சமூக ஆர்வலர்களும் ரசிகர்களும் சல்மானின் இந்த செயலை பாராட்டி வருகிறார்கள்.