கேரக்டராகவே மேடையில் தோன்றிய ஹீரோ
நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, வர்ஷினி வெங்கட், ஷாலினி, ஆனந்த் பாண்டி, கேபிஒய் ராஜா, ரியா, பிரியங்கா நாயர் நடித்துள்ள படம், ‘சொட்ட சொட்ட நனையுது’. மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை குறித்து படித்தவர், நவீன் எஸ்.ஃபரீத். கேபிஒய் ராஜா கதை, வசனம் எழுதியுள்ளார். மலையாளத்தில் ‘அடடா ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலின் மூலம் உலகளாவிய புகழ்பெற்ற ரஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார். ரயீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து வர்ஷினி வெங்கட் கூறுகையில், ‘முடி எவ்வளவு முக்கியம் என்றும், எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே ஹீரோயினாக வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன். அது இப்போது நிறைவேறியுள்ளது’ என்றார். நிஷாந்த் ரூசோ கூறும்போது, ‘கதையை கேட்டவுடன், தலையில் விழும் சொட்டையை வைத்து ஒரு கதையை உருவாக்கி, எப்படி அந்த வலியை சொல்ல முடியும் என்று சந்தேகப்பட்டேன்.
உடனே இயக்குனர், நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களை பார்க்க சொன்னார். என் உறவினர்களில் அதுபோல் இருந்த சிலரை சந்தித்தபோது, அவர்களது வலி புரிந்தது. கதைக்கான வலிமையும் புரிந்தது. சொட்டை என்பது இயற்கை. அதை ஒரு குறையாக சொல்வதால், அது பலரது வாழ்க்கையை பாதிக்கிறது. படத்தை பார்த்த பின்பு, சொட்டை தலையை இனிமேல் யாரும் மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். அனைவரது மனமும் மாறும்’ என்றார். இளம் வயதிலேயே தலையில் சொட்டை விழுந்த ஹீரோவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் திட்டமிடுகின்றனர். அது நடந்ததா, இல்லையா என்பது படத்தின் கதை.