ஹீரோ இல்லேன்னா வில்லன்: சவுந்தரராஜா பளிச்
சென்னை: அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். “மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார் சவுந்தரராஜா.
அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும்” என்கிறது படக்குழு. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது. சவுந்தரராஜா கூறியது: படத்தில் சமூக அக்கறையுடன் கூடிய கருத்து ஒன்று உள்ளது. அதற்காகவே இதில் நடிக்க சம்மதித்தேன். தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் இடி முழக்கம், அருள் நிதியுடன் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வருகிறேன்.
கடந்த ஓரிரு வருடமாக படம் நடிப்பதை குறைத்துக் கொள்ள காரணம், நடித்தால் கதையின் நாயகன் இல்லாவிட்டால் வில்லன் வேடம்தான் என முடிவு செய்துள்ளேன். இதனால் தேர்ந்தெடுத்து கதைகள் செய்கிறேன். தமிழகம் முழுவதும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். இனியும் இந்த பணி தொடரும். படங்களில் நடிப்பதையும் தொடர்வேன். வெப்சீரிஸ்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு சவுந்தரராஜா கூறினார்.
