சரியான நபருக்காக காத்திருக்கும் ஹனி ரோஸ்
மலையாளத்தில் 2005ம் ஆண்டு வெளியான ‘பாய் பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹனி ரோஸ். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் நடித்து வந்தார். தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து பிரபலமானார். சினிமா இவருக்கு பெரியளவில் கை கொடுக்காவிட்டாலும், தனது கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பை விட வணிக நிறுவனங்கள், கடை திறப்புவிழாக்களில் அதிகம் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் தனது காதல் குறித்து ஹனி ரோஸ் பேசியதாவது, ”உலகின் அழகான விஷயம் காதல் மட்டும்தான். மனிதரின் வாழ்க்கை காதல் இல்லாமல் முழுமையடையாது. எனக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இப்போது அது இல்லை. நீண்ட வருடங்களுக்கு முன் அந்த காதல் இருந்தது. என் வாழ்க்கைக்கான, எனக்கேற்ற சரியான நபருக்காக நான் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நபர் இன்னும் என் பார்வையில் விழவில்லை. என் கண்ணில் பட்டுவிட்டால் அவரை விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.