மாண்புமிகு பறை விமர்சனம்...
ஆதி பறை இசைக்குழு நடத்தி வரும் லியோ சிவகுமார், ஆர்யன் இருவரும் ஊரிலுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பறை இசை கற்றுக்கொடுக்கின்றனர். இறுதிச்சடங்குகள், கோயில் திருவிழாக்களில் பறை இசைக்கக்கூடாது என்ற கொள்கையுடன் இருக்கும் அவர்கள், பழங்காலத்து பறை இசைக்கருவியின் மதிப்பை உலகறியச் செய்வதே தங்களின் நோக்கமாக செயல்படுகின்றனர். இது ஊரிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை.
பறை ஒலிக்கவும் கூடாது, கற்றுக்கொடுக்கவும் கூடாது என்று தடை விதிக்கின்றனர். இந்நிலையில், வேறு சாதி பெண் காயத்ரி ரெமாவை லியோ சிவகுமார் காதல் திருமணம் செய்து, ஒரு மகனுக்கு தந்தை ஆகிறார். அப்போது ஆதிக்க சக்திகளிடம் சிக்கிய லியோ சிவகுமாரும், ஆர்யனும் உயிரிழக்கின்றனர். பிறகு காயத்ரி ரெமா என்ன செய்கிறார் என்பது மீதி கதை.
பாரம்பரிய பறை இசைக்கருவியை முன்னிலைப்படுத்தும் நல்ல எண்ணத்தில் எழுதி இயக்கியுள்ள எஸ்.விஜய் சுகுமாருக்கு பாராட்டுகள். அதை திரை வடிவத்தில் சொல்வதற்கு சற்று தடுமாறி இருக்கிறார். லியோ சிவகுமார், ஆர்யன், காயத்ரி ரெமா ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். பறை இசைக்காக உயிரையே விடும் லியோ சிவகுமாரும், ஆர்யனும் மனதை உருக வைக்கின்றனர். காயத்ரி ரெமாவின் விஸ்வரூபம் சில ஆதிக்க சக்திகளின் ஆணிவேரையே பிடுங்கி எறிகிறது.
கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சேரன் ராஜ், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். பறை இசை பற்றி பேச ஆரம்பித்த படம், திடீரென்று டிராக் மாறியதை இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார் கவனித்து இருக்கலாம். தேவாவின் பாடல்கள் கேட்கும் ரகம். சுபா, சுரேஷ் ராம் திரைக்கதை எழுதியுள்ளனர். எஸ்.கொளஞ்சி குமார் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
