தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து லட்சுமி மேனன் தப்பிப்பாரா?: நவ.7ல் தெரியும்

சென்னை: தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து லட்சுமி மேனன் மீள்வாரா என சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் தமிழில், கும்கி, சுந்தர பாண்டியன், வேதாளம், பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பாரில் மது அருந்தும்போது இரு கும்பலுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது, ஒரு கும்பல் காரில் புறப்பட்டு சென்ற நிலையில், மற்றொரு கும்பல் அவர்களை விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இரு தரப்பிலும் சுமுகமாக பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டதாக கூறியதால், கேரள உயர்நீதிமன்றம் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.