இட்லி கடை: விமர்சனம்
தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் ராஜ்கிரணும், கீதா கைலாசமும் இட்லி கடை நடத்துகின்றனர். ராஜ்கிரண் சுடும் இட்லிக்கு அனைவரும் ‘ருசி’கர்கள். கேட்டரிங் படித்த அவரது மகன் தனுஷ், பாங்காக்கில் சத்யராஜ், அவரது மகன் அருண் விஜய், மகள் ஷாலினி பாண்டேவுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் பணிபுரிகிறார். இந்நிலையில் தனுஷுக்கும், ஷாலினி பாண்டேவுக்கும் காதல் திருமணம் செய்து வைக்க சத்யராஜ் ஏற்பாடு செய்கிறார். அப்போது ராஜ்கிரண் மரணம் அடைய, தனுஷின் வாழ்க்கையே மாறுகிறது. ‘அமைதிதான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு’ என்ற ராஜ்கிரண் சொன்னதை மனதில் வைத்து, பழைய உணர்வுகளை தட்டியெழுப்பும் தனுஷின் நடிப்பு சிறப்பு.
ஷாலினி பாண்டேவின் காதலுக்கு மரியாதை தந்து, அருண் விஜய்யின் எகத்தாளத்துக்கு அமைதி காப்பது, சத்யராஜின் நம்பிக்கைக்கு கவுரவம் சேர்ப்பது, சமுத்திரக்கனியிடம் நியாயத்தை கேட்பது, நித்யா மேனனிடம் கரிசனம் காட்டுவது என்று, அனைத்து ஏரியாவிலும் தனுஷின் ஆட்டம் கொடிகட்டி பறக்கிறது. இயக்குனராகவும் அவர் ஜெயித்திருக்கிறார். இட்லியின் மகிமையை சொல்லி இதயத்தை கரைக்கிறார், ராஜ்கிரண். கீதா கைலாசம் அமைதியாக வந்து கவனத்தை ஈர்க்கிறார். வில்லன் அருண் விஜய் தனுஷிடம் ேமாதி, கதையில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இட்லி கடையை விற்றதாக நினைத்து நித்யா மேனன் குமுறுவது சிறப்பு. சத்யராஜ், ஷாலினி பாண்டே, போலீஸ் பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.
கிரண் கவுசிக் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் பாடிய ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி’ பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. எடிட்டர் ஜி.கே.பிரசன்னா, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி ஆகியோரின் பணிகளும் குறிப்பிடத்தக்கது. குலத்தொழிலையே இக்காலத்திலும் தொடர்வது என்கிற இயக்குனர் தனுஷின் கருத்து விவாதத்துக்குரியது. ‘பெற்றோரை அவர்கள் வாழும்போதே கொண்டாடுங்கள்’ என்ற மையக்கருத்து மனதில் நிறைகிறது.