வேவ்ஸ் உச்சி மாநாட்டில் திரண்ட இந்திய நட்சத்திரங்கள்
மும்பை: வேவ்ஸ் உச்சி மாநாடு என்று அழைக்கப்படும் வேர்ல்ட் ஆடியோ விஷுவல் அண்ட் என்டர்டெயின்மென்ட் சம்மிட் (2025) மும்பை ஜியோ வேர்ல்ட் சென்டரில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் ஊடகத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி பற்றி விவாதிக்க பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் மோடி, கலை, இசை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த உச்சி மாநாட்டில் 42 முழு அமர்வுகள், 39 பிரிவு அமர்வுகள், ஒளிபரப்பு, பொழுதுபோக்கு, சினிமா, டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்த்து மொத்தம் 32 பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டின் தொடக்க நாளான நேற்று இந்திய திரையுலகின் நட்சத்திரங்கள்,தொழில்நுட்ப துறையை சேர்ந்த வல்லுநர்கள் என பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, முகேஷ் அம்பானி, ஆனந்த் மஹிந்திரா மற்றும் இந்தியத் திரையுலகப் பிரபலங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன்லால், ஆமிர் கான், ஏ.ஆர். ரஹ்மான், ராஜமவுலி, அக்சய் குமார், ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், அலியா பட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும்போது, ‘‘காஷ்மீரில் நடந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அதை சமாளிக்கும் திறன் வாய்ந்தவர் பிரதமர் மோடி. அவர் திரும்பவும் அங்கு அமைதியை கொண்டு வருவார்’’ என்றார்.