இந்திரா விமர்சனம்...
சென்னை மாநகரில் தொடர்ச்சியாக கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. சிலரது கையை வெட்டி, சைக்கோ மாதிரி நடந்துகொள்கிறார் சுனில். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவிக்கு திடீரென்று பார்வை பறிபோகிறது. இந்நிலையில், அவரது மனைவி மெஹ்ரின் பிர்சோடாவும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். சுனில் மீது சந்தேகப்பட்டு போலீசார் விசாரிக்கும்போது, 28 கொலைகள் செய்த தான், மெஹ்ரின் பிர்சோடாவை கொல்லவில்லை என்று சொல்கிறார்.
போலீசாரின் சந்தேக வலையில் சிக்கும் வசந்த் ரவி, தனது மனைவியை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. நிஜ கொலையாளி யார்? கொலைக்கு என்ன காரணம் என்பது மீதி கதை. முழுநீள சைக்கோ திரில்லர் கதையை விறுவிறுப்பாக எழுதி இயக்கி, மேக்கிங்கில் அசத்தியுள்ளார் சபரிஷ் நந்தா. வசந்த் ரவிக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர்.
மனைவி மீது பாசத்தை பொழிந்து, அவரது திடீர் இழப்பை தாங்க முடியாமல் தவித்து, கொலையாளியை தேடி ஆவேசத்துடன் பயணித்து, பார்வை பறிபோன நிலையிலும் தனது வித்தியாசமான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். மெஹ்ரின் பிர்சோடா, அனிகா சுரேந்திரன் இருவரும் போட்டி போட்டி நடித்துள்ளனர். சைக்கோ கொலையாளியாக சுனில், கறாரான போலீஸ் அதிகாரியாக டான்ஸ் மாஸ்டர் கல்யாண், வசந்த் ரவிக்கு உதவும் ராஜ்குமார், மலையாள நடிகர் சுமேஷ் மூர் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவும், அஜ்மல் தஹ்சீன் பின்னணி இசையும் படத்தை வலுவாக தாங்கி நிற்கின்றன. எடிட்டர் பிரவீன் கே.எல்., ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி பணிகள் குறிப்பிடத்தக்கவை. தொடர் கொலைகள் நடுங்க வைத்தாலும், சுனிலை வீணடித்துள்ளனர். இவர்தான் கொலையாளி என்று நினைக்கும்போது ஏற்படும் திருப்பங்கள், அடுத்தடுத்த காட்சிகளை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. லாஜிக் பார்க்கவில்லை என்றால், சஸ்பென்ஸ் திரில்லரை ரசிக்கலாம்.