சர்வதேச விருது வென்ற ஒரு கடல் இரு கரை
சென்னை: ஈழ இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’. ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். படம் முழுவதும் முடிவடைந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்று வரும் நிலையில், கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுகப் பட இயக்குநருக்கான விருதை ‘ஒரு கடல் இரு கரை’ திரைப்படம் வென்றுள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதம் பாரீஸில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா மற்றும் 2026 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் சரண்யா ரவிச்சந்திரன், விக்னேஷ் ரவி, பழனி, சித்ரா, மெலோடி டோர்கஸ், தரணிதரன், சூர்யா, டாரன் மற்றும் மீனவ பழங்குடியின மக்கள் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.