தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ரூம் பாய்

சென்னை: இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக ‘ரூம் பாய்’ உருவாகியுள்ளது. இதை ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார். சி.நிகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘அரண்மனை 4’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஹர்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், யூடியூப் காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா கற்பகம், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், கீர்த்தி நடித்துள்ளனர்.

ஒரு பாடல் காட்சியில் மும்பை மாடல் நிதி மரோலி கவர்ச்சி நடனமாடியுள்ளார். சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, வேலன் சகாதேவன் இசை அமைத்துள்ளார். சூரியமூர்த்தி பாடல்கள் எழுத, டி.வி.மீனாட்சி சுந்தர் எடிட்டிங் செய்துள்ளார். தினா நடனப் பயிற்சி அளிக்க, கார்த்திக் வர்மன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜெகன் ராயன் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற நான், கடந்த 2002ல் ‘தாத்தா’ என்ற குறும்படத்துக்காக, சிறந்த ஒலிப்பதிவுக்கான தமிழக அரசு விருது பெற்றேன்.

50க்கும் மேற்பட்ட ஆவணம், கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கியுள்ளேன். ‘ரூம் பாய்’ படத்தை ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கியுள்ளேன். விறுவிறுப்பான திரைக்கதை வியக்க வைக்கும். ஏலகிரி, திருப்பத்தூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதி களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது. பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, செகண்ட் லுக்கை ‘96’ பிரேம் குமார் வெளியிட்டு இருந்தனர்’ என்றார்.