இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் ஆஷிகா, ஐஸ்வர்யா
மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவளது கொலைக்கான காரணத்தை தேடி அலைகிறாள் அவளது தோழி. கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான காரணத்தையும் அவள் கண்டுபிடித்தாளா? கொலை செய்தது யார்? அதிலுள்ள மர்மங்கள் என்ன என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. உண்மையான சில சம்பவங்களை மையமாக வைத்து, இன்வெஸ்டிகேஷன் திரில்லர் மற்றும் கோர்ட் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் ரயான் எழுதி இயக்கியுள்ளார்.
ஆஷிகா அசோகன், சான்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பெராடி, நிழல்கள் ரவி நடித்துள்ளனர். ஆஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிக்க, வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் வின்சென்ட் இசை அமைக்க, சந்தீப் நந்தகுமார் எடிட்டிங் செய்துள்ளார். பாலாஜி அரங்கம் அமைத்துள்ளார். கோவை, கொச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆஷிகா அசோகன் கூறுகையில், ‘சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை படத்தில் பேசியுள்ளனர்’ என்றார். ஐஸ்வர்யா கூறும்போது, ‘இப்படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என்று ரசிகர்களை பெரிதும் நம்புகிறேன்’ என்றார்.
