இரு துருவங்களின் கதாநாயகி
அவரது இயற்பெயர், காவ்யா. தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கத்தின் மகள் பெயர், சங்கவி.
எனவே, அவரது பெயரை காவ்யாவுக்குச் சூட்டி அறிமுகம் செய்யப்பட்டார். அன்றைய நாளில் ‘அமராவதி’ படம் சரியாக ஓடவில்லை. விஜய்யுடன் சங்கவி நடித்து, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘ரசிகன்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்று, அப்போது 175 நாட்களுக்கு மேல் ஓடியது. காரணம், சங்கவியின் கவர்ச்சி. ‘அமராவதி’ படத்தில் வெகுளிப்பெண்ணாக நடித்திருந்த சங்கவியா இது என்று, ‘ரசிகன்’ படத்தை திரையரங்குகளில் பார்த்த, குறிப்பாக செகண்ட் ஷோ பார்த்த பாமர ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். முதலில் ‘அமராவதி’ படத்தைப் பார்த்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தனது ‘ரசிகன்’ படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு சங்கவி சரிப்படுவாரா என்று கடைசிவரை சந்தேகப்பட்டார். குடும்பப்பெண் தோற்றத்தில் இருக்கும் சங்கவி, மாடர்ன் கேரக்டருக்கு சரிப்பட்டு வருவாரா என்ற சந்தேகத்தை சங்கவி சுக்குநூறாக அடித்து நொறுக்கினார். ஆனால், ‘ரசிகன்’ படத்தின் வெற்றிக்குப் பின்பு, ‘சங்கவி எல்லாம் குடும்பப்பெண் கேரக்டருக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என்று திரையுலகில் பேச ஆரம்பித்தனர்.
பிறகு சங்கவி நடிப்பில் வெளியான படங்களில் அவரது கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சேரன் இயக்கத்தில் முரளி, மீனா நடிப்பில் வெளியான ‘பொற்காலம்’ படத்தைத் தவிர, தமிழில் சங்கவிக்கு குடும்பப்பெண் வேடம் கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கில் அதுபோன்ற வாய்ப்பு தேடி வந்ததது. அதை அவர் உறுதியாகப் பிடித்துக்கொண்டு பல படங்களில் நடித்தார். ஒரு ஆண்டில் மட்டுமே அவரது நடிப்பில் 16 படங்கள் ரிலீசாகி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு தன்னைத்ேதடி வந்த எல்லாப் படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தார். அவர் ஒப்புக்கொண்டு நடிக்கும் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் அல்லது நீச்சல் உடையில் வருவது அல்லது மழையில் நனைந்து ஹீரோவுடன் ஆடிப்பாடுவது போன்ற காட்சி தவறாமல் இடம்பெறும். இதுபோல் நடித்ததால் ஏற்பட்ட இமேஜ் வட்டத்தில் சிக்கித்தவித்த சங்கவி, ஒருகட்டத்தில் கவர்ச்சி வேடங்களே வேண்டாம் என்று தவிர்த்தார்.
அஜித் குமாருடன் ‘அமராவதி’ படத்தில் நடிக்கும்போது சங்கவியின் வயது 14. அப்போது அவர் 9ம் வகுப்பு படித்தார். அவருக்குக் கிடைத்த விடுமுறை நாட்களில் அப்படத்தில் நடித்து முடித்தார். பொதுவாக சங்கவி, இயக்குனர் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய நடிகை என்று பெயரெடுத்தார். படப்பிடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ரொம்ப கறாராகவும், அதிக கோபத்துடனும் நடந்துகொள்வார். சரியாக நடிக்கவில்லை என்றால், கோபத்தில் பாரதிராஜாவைப் போலவே பளாரென்று அறைந்துவிடுவார். ஆனால், அவரிடம் சங்கவி ஒருநாள் கூட அடி வாங்கியது இல்லை. ‘விஷ்ணு’ படப்பிடிப்பு நடந்தபோது, ஜில்லென்று இருக்கும் தண்ணீரில் மூழ்கி எழவேண்டிய காட்சியை எஸ்.ஏ.சந்திரசேகரன் படமாக்கினார். அப்போது சங்கவி மூழ்கி எழுந்துவிட்டார். ஆனால், விஜய் மட்டும் நடுங்கினார். இதனால் கடுமையாக கோபப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் தன் மகன் என்றுகூட பார்க்காமல், ‘அந்த பொண்ணால முடியுது. உன்னால முடியாதா?’ என்று திட்டிவிட்டார்.
அன்றைய நாட்களில் சங்கவியை யாருடன் போட்டியாக ஒப்பிட்டனர் தெரியுமா? அவர் குஷ்புவுக்கு சரியான போட்டி என்று திரையுலகினரும், ரசிகர்களும் ஒப்பிட்டனர். குஷ்பு மாதிரி உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று சங்கவிக்கு சிலர் அட்வைஸ் செய்தனர். இதை நம்பி அவர் தனது உடல் எடையை அதிகரித்தார். இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் டிரெண்ட் தடாலென்று மாறியது. குஷ்பு அலை ஓய்ந்து சிம்ரன் அலையடிக்க ெதாடங்கியது. உடனே அவருக்குப் போட்டி என்று, சங்கவியை உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். அதையும் சங்கவி உண்மை என்று நம்பினார். அவரது முதல் படமான ‘அமராவதி’யைப் பார்த்த அன்றைய விமர்சகர்களில் சிலர், ‘இது ஒரு செத்த மூஞ்சி’ என்பது போல் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ‘ரிஷி’ படத்தைப் பார்த்த சில விமர்சகர்கள், ‘இந்தப் பெண் படத்தையே சுமக்கிறார்’ என்பது போல் பாராட்டினர். சங்கவி எதிர்கொண்டது போன்ற சில தரக்குறைவான விமர்சனங்களை விஜய்யும் தனது முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் எதிர்கொண்டார் என்பது, இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் அறிய வாய்ப்பில்லை.