தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆடிஷனில் அவமானப்படுத்தியதாக இஷா தல்வார் குமுறல்

மும்பையை சேர்ந்த இஷா தல்வார், 2012ல் தேசிய விருது வென்ற ‘தட்டத்தின் மறயத்து’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் பிசியாக நடித்தார். தற்போது அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, இந்தியில் முதல் படத்தின் ஆடிஷனுக்காக தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியில் நான் நடிக்க இருந்த படத்தின் ஆடிஷனுக்காக என்னை நேரில் வரச்சொன்னார்கள். ஆனால், என்னை ஆடிஷன் செய்ய அவர்கள் தேர்வு செய்த இடம் தனி அறை கிடையாது.

சுமார் 100 பேர் அமர்ந்து சாப்பிட்ட ஒரு ரெஸ்டாரண்டில், என்னை ஒரு டேபிளில் அமர வைத்து, திடீரென்று கதறி அழுதபடி வசனம் பேச சொன்னார்கள். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய எனக்கு அவர்களது செயல் கடுமையாகவும், தன்னம்பிக்கையை முழுமையாக குறைக்கும் விதமாகவும் இருந்தது. என்னால் அப்படி நடிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தனி அறையில் ஆடிஷன் நடக்கும்போது நடிப்பதை, கண்டிப்பாக என்னால் படப்பிடிப்பில் பலர் முன்னிலையில் நடிக்க முடியும் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது.

அப்படி உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், நிஜமாகவே 100 துணை நடிகர்களை வைத்து ஆடிஷன் நடத்த வேண்டுமே தவிர, இதுபோல் பொதுவெளியில் ஆடிஷன் நடத்துவது மிகவும் மலிவான எண்ணமாகும். எப்போதுமே நடிக்க வரும் புதியவர்களை கவுரவமாக நடத்துங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.