பஹத் பாசிலிடம் பேசுவது சிரமமா?
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய ெமாழிகளில் பிசியாக நடித்து வரும் பஹத் பாசிலை தொடர்புகொள்வதே மிகப்பெரிய சிரமம் என்று பேசியிருக்கிறார், ஒரு தயாரிப்பாளர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், பஹத் பாசிலின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘சாப்பா குரிஷு’ என்ற படத்தை தயாரித்தவர். ஆரம்பகாலத்தில் பஹத் பாசில் நடித்த ‘டெபியூட்’, ‘கேரளா கஃபே’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பஹத் பாசில் நடித்த ‘சாப்பா குரிஷு’ என்ற படம்தான் அவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட அகாடமி நிகழ்ச்சியில் பேசிய லிஸ்டின் ஸ்டீபன், ‘நான் தயாரித்த படத்துக்கு பஹத் பாசில் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து கதை சொன்னேன்.
அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்ததால், ‘எவ்வளவு சம்பளம் வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு பஹத் பாசில், ‘உங்களுக்கு எவ்வளவு கொடுக்க விருப்பமோ அவ்வளவு கொடுத்தால் போதும். இதற்கு முன்பு 65,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தேன்’ என்றார். உடனே நான், ‘உங்களுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறேன்’ என்று சொல்லி, முதன்முதலாக அதிகபட்ச சம்பளம் கொடுத்தேன். ஆனால், இன்று பஹத் பாசில் மலையாள படவுலகில் அதிக உச்சத்தில் இருக்கிறார். 5 கோடி, 10 கோடி ரூபாய் என்று, எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அவரை தொடர்புகொள்வது சிரமமாக இருக்கிறது. அதுதான் சினிமாவின் மேஜிக்’ என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.