தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சக நடிகருக்காக வருத்தப்பட்ட ஜான்வி கபூர்

இந்தியில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்த ‘ஹோம்பவுண்ட்’ என்ற படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இப்படம், சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, அங்கும் பாராட்டுகளை பெற்றது. இப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

படம் குறித்து ஜான்வி கபூர் கூறுகையில்,

‘முதலில் இதுவும் ஒரு சாதாரண படம்தான் என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோதுதான், அதன் உண்மையான மகத்துவத்தை புரிந்துகொண்டேன். அற்புதமான ஒரு படைப்பை நாங்கள் உருவாக்குகிறோம் என்று குழுவினர் அனைவரும் உணர்ந்தோம். கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு, பிறகு பத்து நிமிடங்களுக்கு மேல் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தபோது, ​​இக்கதை அனைவரது இதயங்களையும் எவ்வளவு தொட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கதையின் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமைப்படுகிறேன்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இஷான் கட்டர், இந்த நாட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர் என்றாலும், இதுவரை அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், பட விழாக்களை தொடர்ந்து பல்வேறு தரப்பு ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டுவதை பார்த்தபோது, உண்மையிலேயே நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். பிரதிபலன் பார்க்காமல், மிகவும் கடினமாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை இச்சம்பவம் எனக்கு உணர்த்தியது’ என்றார்.