‘பெத்தி’ வெற்றிக்கு காத்திருக்கும் ஜான்வி கபூர்
புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படம், ‘பெத்தி’. இப்படத்தின் கேரக்டருக்காக வலிமையான உடல் மாற்றம் செய்து, கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டார் ராம் சரண். வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கும் இப்படத்தை விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகின்றன. தற்போது மைசூரில் ராம் சரண் பங்கேற்கும் பிரமாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ஜானி நடனப் பயிற்சி அளிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்பாடல் காட்சியில் 1,000க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ெஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி படம் வெளியாகிறது. பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய படவுலகை நோக்கி ஆர்வத்துடன் வந்த ஜான்வி கபூர், ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்தார். அப்படம் தோல்வியடைந்த நிலையில், ‘பெத்தி’ படத்தின் வெற்றியை அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.