தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஜான்வி கபூர் படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

மும்பை: ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள இந்தி படம் பரம் சுந்தரி. இப்படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லரின் ஆரம்பத்தில் சர்ச்சில் நாயகனும் நாயகியும் ரொமான்ஸ் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது தற்போது கிறிஸ்துவர்கள் சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை எனும் பெயர் கொண்ட அமைப்பு, கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, அக்காட்சியினை படத்தில் இருந்து மட்டுமல்லாமல், டிரெய்லர் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அதன் விளம்பரப்படுத்தும் அனைத்திலிருந்தும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி நீக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, மும்பை காவல்துறை, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.