பத்திரிகையாளராக மாறிய ஷில்பா மஞ்சுநாத்
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமய்யா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா நடித்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’. அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஏஜிஆர் இசை அமைத்துள்ளார். சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ், சாண்டி ரவிச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடுகிறது. ஷில்பா மஞ்சுநாத் கூறுகையில், ‘நான் கன்னட நடிகையாக இருந்தாலும், தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தமிழ் திரையுலகிற்கு நன்றி.
நான் தமிழில் அறிமுகமானபோது தமிழில் பேசத் தெரியாது, நன்றாக நடிக்கவும் தெரியாது. எனினும், இங்குதான் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்பு வழங்கி அவர்களை பாராட்டுகின்றனர். தொடர்ந்து ஆதரவும் தருகின்றனர். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்கப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளேன். இதற்காக என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய இயக்குனருக்கு நன்றி. படம் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதில் நடிகராக அறிமுகமாகும் மகேஸ்வரன் தேவதாஸுக்கு வாழ்த்துகள்’ என்றார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனீஸ் அஷ்ரஃப், மிஷ்கின் இயக்கியிருந்த ‘பிசாசு’ படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.