கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்: சுந்தர்.சி இயக்குகிறார்
சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1997ல் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு 28 வருடங்களுக்கு கழித்து ரஜினிகாந்த்தை இயக்குகிறார் சுந்தர் சி. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த மைல்கல் கூட்டணி இந்திய சினிமாவின் இரண்டு உயர்ந்த சக்திகளை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையேயான ஐந்து தசாப்த நட்பையும் சகோதரத்துவத்தையும் கொண்டாட கூடியதாக இருக்கிறது.
இவர்களது பிணைப்பு பல தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்கிறது. 44ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் மேற்பார்வையில் உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடுகிறது.
காற்றாய் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழித்து இரு சிறு நதிகளானோம், மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம், நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க நாமும் பொழிவோம் மகிழ்வோம், வாழ்க நாம் பிறந்த கலை மண்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
